Sunday, December 27, 2015

ஒரு சிப்பாயின் சுவடுகளில்..!

வணக்கம் நண்பர்களே!
              
                 *இந்த கிராபிக் நாவலின் முதல் பக்கத்தில் தொடங்கி கடைசி பக்கம் வரை சொல்லப்பட்ட கதையை மட்டுமே சுருக்கமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். 
தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள தயாராகவே இருக்கிறேன்.!
---------//வாங்க நாமும் அந்த சிப்பாயின் சுவடுகளை பின்பற்றிப் போய் பார்ப்போம்.!-------- 

              *முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்., வியட்நாமில் புரட்சியை அடக்க புறப்பட்டு போன ப்ரெஞ்ச் படையில் பலியானவர்களின் சவப்பெட்டிகளை  சுமந்து கொண்டு ப்ரான்ஸ் வருகிறது ஒரு விமானம். 
சாதிக்க போன சிப்பாய்களில் சிலர்  சவப்பெட்டிகளாய் திரும்ப., அவற்றை பெற வந்திருக்கும் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறது ஒரு தொலைகாட்சி நிறுவனம். ஒட்டுமொத்த ப்ரான்சும் நிகழ்சியை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
              *விவரிக்க இயலாத சோகத்தை முகத்தில் தேக்கி நிற்கும் ஒரு மூதாட்டியை பேட்டி எடுக்கிறார்கள். வியட்நாமுக்கு போன தன் மகனைப்பற்றி தகவலேதும் கிடைக்கவில்லை என்கிறாள் அம்மூதாட்டி. போர் முடிந்து திரும்பவும் இல்லை. இறந்தவர்களின் பட்டியலிலும் அவன் பெயர் இல்லை. ஏதாவது தகவல் கிடைக்காதா என்று ஏக்கத்தோடு இருக்கிறாள் மூதாட்டி. 
"மிஸஸ் ஜோபர்ட் டி வலென்ட்ரே " என்று தன்னுடைய பெயரை மூதாட்டி சொன்னதும்  , ஒரு மனநோய் காப்பகத்தில் இந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நியூரித் என்னும் நபர் வெறீபிடித்தவர் போலாகி டிவியை உடைத்துவிடுகிறார் (1)
              *அன்றிரவே காப்பத்திலிருந்து தப்பிச்செல்கிறார் நியூரித். இத்தகவலை டாக்டர் ரகசியமாக தொலைபேசியில் ஒருவருக்கு தெரிவிக்கிறார் (2) .
              *இதே நிகழ்ச்சியை ஒரு பாரில் இருந்து பார்க்கும் டீவி ரிப்போர்ட்டரான நிக்கோலஸ் வலோனுக்கு, காணாமல் போன மூதாட்டியின் மகனான அந்த  சிப்பாயை பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் யோசனை வருகிறது. மேலிடத்தில் போராடி அனுமதி பெறும் வலோன் அம்மூதாட்டியை காணச் செல்லும் வழியில் விபத்தொன்றில் ஒருவர் பலியானதை பார்க்கிறார்.  இறந்தவர் யாரென்று நிக்கோலஸுக்கு தெரியாது. நமக்கு தெரியும். அது மனநோயாளி நியூரித். இந்த இடத்தில் ஒரு நீலக்கலர் காரும் மர்ம நபர் ஒருவரும் காண்பிக்கப் படுகிறார்கள் (3)
              *கேப்ரியேல் லாரு  (3.1 ) என்றொரு பத்திரிக்கையாளர் மூதாட்டியின் வீட்டிற்கு செல்லும் வழியை வலோனுக்கு சொல்கிறார். ஹென்றியின் தாயான மூதாட்டியிடமிருந்து அவனுடைய நிழல் படம் ஒன்றையும் சில நண்பர்கள் மற்றும் காதலி பற்றிய தகவலோடு திரும்பும் வலோனை நீலக்கார் ஆசாமி பின்தொடர்ந்து கவனித்துக்கொண்டே வருகிறான்.
         
             *ஹென்றியின் காதலி மற்றும் நண்பரிடம் விசாரித்து , அவன் ப்ரெஞ்சு புரட்சி படையில் அங்கம் வகித்து பின்னர் ராணுவத்தில் சேர்ந்ததையும் , வியட்நாமிய கொரில்லா படையில் இணைந்ததையும்  அறிந்து கொள்கிறார் வலோன். ஹென்றி பற்றிய ஆராய்ச்சியை தொடர வேண்டாமென வலோனுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. ஹென்றியே பேசுவது போல ஒரு போன்காலும் வருகிறது. ஆனால் அசராமால் தேடலை தொடர்கிறார் வலோன். 

             
             *அடுத்தடுத்த தகவல்களால் ஹென்றி குறித்த மர்மங்களே அதிகமாகிறதே தவிர அவனுக்கு என்ன ஆயிற்று?  உண்மையில் அவன் யார் என்பதும் மர்மமாகவே தொடர்கிறது. தொடரும் தேடலில் குய்ச்சார்ட் என்ற நபருக்கு ஹென்றியைப் பற்றி நிறைய தவல்கள் தெரியும் என்று வலோனுக்கு தெரியவருகிறது. குய்ச்சார்ட்டின் வீட்டை  வலோன் அடைந்தபோது.  அவர் இறந்து கிடக்கிறார். (சற்று தூரத்தில் நீலக்கார் ஆசாமி தென்படுகிறார்.)
             *குய்ச்சார்ட்டின் வீட்டில் தேடியதில் வலோனின் கையில் சிக்குகிறது ஒரு கடிதம். அந்த கடிதம் வியட்நாமில் வசிக்கும் ஒரு பெண் குய்ச்சார்ட்டுக்கு எழுதியது. அந்தப் பெண் ஹென்றி ஜோபர்ட்டின் மகள்.
ஹென்றிக்கு குடும்பம் இருந்தது தெளிவாகவே., வியட்நாமுக்கு பயணிக்கிறார் வலோன்.  நீலக்கார் ஆசாமியும் பின் தொடர்கிறான்.
             *ஹென்றியின் மகளான கிம்சி தன்னுடைய தந்தை., ப்ரெஞ்ச் படையிலிருந்து எப்படி வியட்நாமீய கொரில்லா புரட்சி படையில் சேர்ந்தார் என்பதையும்.,  அவர் செய்த சில சாகசங்களையும் சொல்கிறாள். அவற்றுள் முக்கிய இடம் பெறும் சாகசமானது.,  ப்ரெஞ்ச் ஆயுதக்கிடங்கை ஹென்றி தலைமையிலான வியட்நாம் புரட்சியாளர்கள் சூறையாடுவதுதான். அந்த ஆயுதக்கிடங்கின் பொறுப்பதிகாரி காப்டன் கார்பினை (4) மடக்கி ஆயுதங்களை கிளப்பிக்கொண்டு போகிறது ஹென்றியின் செஞ்சட்டை படை.
              *சில நாட்கள் கழித்து துவாங் பை என்னும் இடத்தில் நிறைய போராளிகள் கைது செய்யப் படுகின்றனர். அந்த கைதிகளில்  தந்தை ஹென்றியும்  இருந்தாரா என்பது குறித்து கிம்சியின் தாய்க்கும் தெரியாது என்றும் அதன் பிறகு அவரைப் பற்றி தகவல் ஏதும் இல்லை என்கிறாள் கிம்சி. கிம்சிக்கும் தந்தை ஹென்றி எங்கே போனார்., என்ன ஆனார் என்பது பற்றி தெளிவாக தெரிவதில்லை. எனவே கிம்சியுடன் ப்ரான்ஸ் திரும்பும் வலோன், கிம்சியை அவளுடைய பாட்டியிடம் சேர்த்து விட்டு கேப்டன் கார்பினை சந்திக்க செல்கிறார்.
              

              *துவாங் பையில் போராளிகளை கைது செய்தவர் கேப்டன் கார்பின்தான். துவாங் பை என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட ஹென்றியை வேறோரு முகாமுக்கு அனுப்பிவிட்ட பிறகு அவனைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறுகிறார் அன்றைய கேப்டனும் இன்றைய ஜெனரலுமான கார்பின்.
              *ஹென்றியின் நிலை குறித்த மர்மம் வெளிவரும் வாய்ப்பே இல்லையென்று வலோன் சோர்ந்து போகும் சமயத்தில் கேப்ரியேல் லாரு மூலமாக புஜால் என்றொரு நபரை சந்திக்கும்படி தகவல் வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே வலோனின் தொலைபேசியை ஒட்டுக்கேட்குமே நீலக்கார் ஆசாமி இதனையும் கேட்டுவிட்டு வலோனுக்கு முன்னதாக சென்று புஜாலை தீர்த்துக்கட்ட முயல்கிறான். கொலைமுயற்சியில் தப்பி மருத்துவமனையில் இருக்கும் புஜாலை சந்திக்கிறார் வலோன்.
              *ஹென்றி ஜோபர்ட் என்ற சிப்பாயின் சுவடுகள் முடிந்த தகவல்  புஜாலால், வலோனுக்கு  தெரிவிக்கப்படுகிறது. கேப்டன் கார்பினால்  கைது செய்யப்பட்ட ஹென்றி மற்றும் சில போராளிகள் டின்பின் முகாமில் நியூரித் மற்றும் புஜால் கைகளால் கொன்று புதைக்கப்படுகிறார்கள்.
              *பிடிபட்ட அணிமாறிய ப்ரெஞ்ச் சிப்பாய்களை கொல்லக்கூடாது என்று மேலிடம் சொல்லியிருந்தாலும் கேப்டன் கார்பினின்  உத்தரவுக்கு கீழ்படிந்து ஹென்றியை கொன்று புதைத்துவிடுகிறார்கள் நியூரித்தும் புஜாலும்.
               *வியட்நாம் போராளிகள் டின்பின் முகாம் செல்லும் வழியில் வண்டியை தாக்கி ஹென்றி உள்ளிட்ட போராளிகளை மீட்டுச் சென்றுவிட்டனர் என்று மேலிடத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து விடுகிறார் கார்பின்!
              *தற்போது உயர்பதவியில் இருக்கும் ஜெனரல் ரோஜர் கார்பினுக்கு., ஹென்றி ஜோபர்ட்டின் முடிவு குறித்து வெளியே தெரிவதால் பல சிக்கல்கள் எழும் என்பதாலேயே வலோனின் ஆய்வை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன  என்பது வலோனுக்கு புரியத் தொடங்குகிது.
ஒரூ வழியாக ஹென்றி ஜோபர்ட்டின் வாழ்க்கை ( ஒரு சிப்பாயின் சுவடுகளில்)  ஆவணப்படமாக நிக்கோலஸ் வலோன் என்னும் விடாக்கண்ட ரிப்போர்ட்டரால் பூர்த்தியடைகிறது.
              (1)  - ஹென்றி ஜோபர்ட்டை சுட்டுக்கொன்ற (கேப்டன் கார்பின் உத்தரவால்)  இருவரில் ஒருவரே இந்த நியூரித். (இன்னொருவர் புஜால்.) 
அந்த குற்ற உணர்வே நியூரித்தை மனநோயாளி ஆக்கிவிடுகிறது.
டீவியில் பேட்டியளிக்கும் மூதாட்டி ஹென்றி ஜோபர்ட்டின் தாயார் என்று தெரிந்ததும் நியூரித் அப்படி நடந்து கொள்கிறார்.
              (2)  நியூரித் தப்பிச்சென்ற தகவலை டாக்டர் போனில் தெரிவிப்பது  இந்நாளைய ஜெனரல் கார்பினுக்குத்தான். அவ்வபோது நியூரித்தின் நிலைகுறித்து டாக்டர் கார்பினுக்கு தகவல் தந்து கொண்டிருப்பார்.
              (3)  தப்பிச்சென்ற நியூரித் ஹென்றி குறித்த தகவலை வெளியே சொல்லிவிடக்கூடும் என்றெண்ணி , நியூரித்தை கொல்ல கார்பின் அனுப்பும் ஆசாமிதான் நீலக்கார் மர்மநபர். தொடர்ந்து வலோனுடைய நடவடிக்கைகளை கண்காணித்து., அவருடைய முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்துவதும் இதே நீலக்கார் ஆசாமிதான். (ஜெனரல் கார்பின் உத்தரவுப்படி.)
              (3.1) - ஹென்றியின் தாயாரைப் பார்த்து உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கவே நியூரித் தப்பிச் சென்றிருக்கிறார் என்று யூகித்த கார்பின்., மூதாட்டியின் கிராமத்துக்கு செல்லும் வழியிலேயே அவரை கொன்றுவிடுகிறார் (நீலக்கார் ஆசாமி உதவியுடன்.)  அந்த இடத்தில் வலோனை சந்தித்து மூதாட்டியின் வீட்டிற்கு வழி சொல்லும் கேப்ரியேல் லாரு என்னும் பத்திரிகை நிருபர்தான் பின்னர் புஜாலை பற்றி வலோனுக்கு தகவல் தருகிறவர்.
              (4) - வியட்நாமிய புரட்சிப்படையில் செஞ்சட்டை தளபதி என்று பெயர் எடுத்திருந்த ஹென்றி ஜோபர்ட்., ப்ரெஞ்ச் முகாம் ஒன்றை தாக்கி ஆயுதங்ளை கைப்பற்றுகிறான். அந்த முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்தவர் கேப்டன் கார்பின். அந்த சம்பவம் அவருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியதாலேயே ஹென்றியின் மீது அதீத வன்மத்துடன் இருக்கிறார் கார்பின். பின்னர் துவாங் பையில் ஹென்றி கைது செய்யப்பட்டபோது., வெளியுலகுக்கு தெரியாமல் ஹென்றியை கொன்று புதைத்துவிடுகிறார் (நியூரித் மற்றும் புஜால் மூலமாக). இத்தனை தகவல்களையும் மிகுந்த சிரமப்பட்டு வலோன் ஆவணப்படுத்தி இருந்தாலும்., அதனை ஒளிபரப்ப டீவி நிலையத்திற்கு மேலிடம் தடைபோட்டுவிடுகிது. வலோன் தன்னுடைய அத்தனை உழைப்பும் வீணாக போனதால் விரக்தியில் "இதை இப்படியே விட்டுவிடமாட்டேன் " என்று ஆவேசமாக சொல்லிவிட்டு டீவி நிலையத்திலிருந்து வெளியேறுகிறார்.

              *(நிக்கோலஸ் வலோனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாலும்., ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடைபோட்ட பிறகும் வலோன் வேறு வழிமுறைகளில் ஹென்றியின் வரலாற்றை வெளியிட்டுவிடுவாரோ என்ற அச்சத்திலும் வலோனையும் தீர்த்துக்கட்டி இந்த முப்பாதாண்டுகால மர்மத்தை மர்மமாகவே நிலைத்துவிடச்செய்யும் எண்ணத்தில் நீலக்கார் மர்ம ஆசாமியை கார்பின் ஏவி விட்டிருக்கலாம் என்ற யூகம் என்னுடையது. கதையில் இல்லை)
              *வீட்டில் தனியாக பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது காலிங்பெல் சத்தமிடுகிறது. கதவை திறக்கிறார் வலோன்.  பின்னனியில் நீலக்கார் தெரிய மர்ம ஆசாமி புன்னகையுடன் வாசலில் நிற்க., கிழித்து போடப்பட்ட ஹென்றி ஜோபர்ட்டின் புகைப்பத்துடன் கதை நிறைவடைகிறது.!!!
              *கிராபிக் நாவல் என்றால் நிலவேம்பு கஷாயத்தை குடிக்கும் முகபாவத்தை கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இயண்றவரை விரிவாகவும் சுருக்கமாகவும் இவ்விமர்சனத்தை எழுதியுள்ளேன்.
அழகான ஆழமான சித்திரக் கதையான "ஒரு சிப்பாயின் சுவடுகளில் "  இந்த விமர்சனத்திற்கு பிறகு ஓரிரூ நண்பர்களால் சிலாகிக்கப்பட்டாலாவாது டைப்படித்த என்னுடைய விரல்களுக்கு ஒத்தடமாயிருக்கும்.! !! 
பொறுமையாக படித்தமைக்கு நன்றி நண்பர்களே!!!
என்றென்றும் நட்புடன் -
KiD ஆர்டின் KannaN.
---------------------------------------------------------------
சென்ற பதிவுக்குப்பின் சிலபல காரணங்களால் பதிவிட காலதாமதம் ஆனதற்கு சன்னமான சாரியை நண்பர்கள் அனைவரிடமும் இருவரும் கேட்டுக்கொள்கிறோம்.......உங்கள்...
சேலம்Tex விஜயராகவன்&KiD ஆர்டின் KannaN.

Monday, August 3, 2015

ஒரு பட்டிக்காட்டானின் முதல் மிட்டாய்கடை அனுபவம் (ஈரோடு 2014)

வணக்கம் நண்பர்களே.!

            *இந்த பதிவில் நண்பர்களின் பெயர்களை குறிப்பிடாமல் விட்டதற்கு காரணம்.,  ஒருவர் பெயரை மறந்துவிட்டாலும் சங்கடம் ஏற்படுமே என்பதுதான்.
            *ஆகஸ்டு 2, 2014. அன்று சனிக்கிழமை.  நள்ளிரவு ஆறு மணிக்கே எழுந்து., தயாராகி (குளிச்ச ஞாபகம் இருக்கு) , ஒருவித படபடப்புடன் பேருந்திலேறி ஈரோட்டிற்கு கிளம்பினேன். மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்ச்சி பொறிந்தது. (பொங்கியதுன்னு சொன்னா., மத்தாப்பு பொங்குமான்னு அறிவியல் பூர்வமா கேள்வி கேப்பிங்களே.?)
            *அதுநாள் வரையிலும் ப்ளாக்கிலும்., தொலைபேசியிலும் சந்தித்திருந்த நண்பர்கள் பலரையும்., எடிட்டரையும் நேரில் பார்த்து பேசப்போகிறோம் என்ற குதூகலத்தில் மனம் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தது.
பஸ்ஸில் என்னைப்போலவே., கோழி திருடிய தினுசில் உட்கார்ந்து இருந்த சிலரை பார்த்து., ஒருவேளை இவங்களும் நம்மள மாதிரி புக்ஃபேருக்குத்தான் வராங்களோ , ப்ளாக்குல பழகின நண்பர்கள் யாராச்சும் இருப்பாங்களா?  , என்று ஏதேதோ எண்ணங்களுடன் ஈரோட்டை அடைந்தேன்.!
           *அதற்குள்ளாகவே., சில நண்பர்கள் அங்கே குழுமியிருந்தனர். அவர்களுடன் ஐக்கியமான ஐந்தாவது நிமிடத்தில் ஜூ.எடிட்டருடன் நமது எடிட்டரும் நுழைவாயிலுக்கு வந்துவிடவே , கோயிலில் பொங்கல் கொடுப்பவரை சுற்றி வளைப்பது போல் அவரை சுற்றி ஒரு வளையத்தை உருவிக்கிவிட்டோம்.!  Gift parcel போல L M S காப்பி ஒன்றை கையோடு கொண்டு வந்திருந்தார். (எடிட்டர் பாஷையில் சொல்லவேண்டுமெனில் , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு டப்பா போல)
            *நண்பர் ஒருவருக்கு போன் செய்தபோது, வந்து கொண்டிருக்கிறேன். நீங்க சாப்பிட்டாச்சான்னு கேட்டார். அப்போதுதான் டிபன் செய்யலை எனும் சொரணையே வந்தது. பக்கத்திலேயே மிலிட்டரி ஹோட்டல் தெரிந்தது. ஆனால் சனிக்கிழமை சைவம் மட்டுமே என்பதில் நான் ரொம்ப ஸ்டிரிட்டு. (வூட்டுக்காரம்மா சொல்லி எல்லாம் இல்லீங்க.! நானே சுயமா எடுத்த முடிவு. நம்புங்க.)
ஒருவழியா சைவ ஹோட்டல் ஒன்று கண்ணில் படவே பூரியும் பாதி வேகாத உருளைக் கிழங்குடன் கூடிய மசாலையும் உள்ளே தள்ளிவிட்டு புக்ஃபேர் நுழைவாயிலை அடைந்தேன்.
              *எல்லோரும் வணக்கம் சொல்லவே., நானும் என் பங்கு வணக்கத்தை எடிட்டரிடம் தெரிவித்தேன். அவரோ., சத்தம் வருது ஆனா ஆளு இருக்குற மாதிரி தெரியலயே , என்ற தினுசில்  தேடிவிட்டு திரும்பிகொண்டார்.  நம்ம கலரு அப்படி, கண்ணு கூசியிருக்கும்.  சரி!  உள்ளே  ட்யூப்லைட் வெளிச்சத்துல மறுபடி வணக்கம் சொல்லிக்குவோம் என்று சமாதானமடைந்தேன்.
              *11 மணிக்குத்தான் உள்ளே விடுவார்களே., என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தபோது., என்னைப் போலவே முதல்முறை வந்த ஒரு நண்பர் நிறைய போஸ்டர்கள் வைத்திருந்தார்.
நம்மதான் காத்துலயே படம் வரையுற ஆளுகளாச்சே., காகிதம் கிடைச்சா விட்டுடுவோமா என்ன?
ஆளுக்கொரு போஸ்டரை கையில் வாங்கி கொண்டு ஸ்டால் டெக்கரேட் பண்ணப் போறோம் என்று. பந்தாவாக கேட்டில் சொல்லிவிட்டு., இன்ட்ரொடக்ஷன் சீன்ல ஹீரோ நடக்குற மாதிரி கெத்தா உள்ளே நுழைஞ்சிட்டோம்.! கொண்டு போன போஸ்டரை எல்லாம் , ஸ்டாலில் கேப்பே இல்லாமல் ஒட்டி முடித்தனர் நண்பர்கள்.!
              *நான்கைந்து பேர் மட்டுமே அப்போது இருந்தோம். நண்பர் ஒருவர் என்னை இன்னொரு நண்பருக்கு அறிமுகப்படுத்தினார். இதை கேட்டுக் கொண்டிருந்த எடிட்டர்  , ஓ... நீங்கதானா அது?  என்று கேட்டபடி கைகொடுத்தார். (அண்ணாந்து பார்த்தேன். மேலே நிறைய லைட்டெல்லாம் போட்டு வெளிச்சம் அதிகமாகவே இருந்தது).
               *நான் சிறுவயதிலிருந்து சுவாசித்து சிலாகிக்கும்., காமிக்ஸ் உலகின் கதாநாயகருடன் கைகுலுக்கிறேன் என்று பெருமிதமாக இருந்தது. பதினோரு மணி ஆவதற்குள்., நிறைய நண்பர்கள் கூடிவிடவே , இதற்கு மேலும் தாமதித்தால்.,  நண்பர்களே L M S ஐ பிரித்து (பிச்சி)  வெளியிட்டு விடுவார்கள்., என்று பயந்து., எடிட்டர் மைசூர் பாகு டப்பாவை திறந்து இதழை வெளியிட்டார். முதல் பிரதியை "இவர் " வெளியிட "அவர் " பெற்றுக்கொண்டார். (நாந்தான் பேரு சொல்லமாட்டேன்னு முதல்லயே சொல்லிட்டேனே.?)
              *அந்த கணத்தில் அங்கே ஏகப்பட்ட P.C.ஸ்ரீராம்களும்., கே.வி. ஆனந்துகளும் உருவானார்கள். ப்ளாஷ் ப்ளாஷ் னு போட்டோக்கள். வீடியோக்கள். செல்போன் படப்பிடிப்புகள் என அரங்கமே அதிர்ந்தது. நடுநடுவே விஜய் டிவி ஆங்கர்களை போல ஊஊஊ என்றும் ஹேய்ய்ய் என்றும் நண்பர்கள் சப்தமிட்டனர்.
             *அந்நேரத்தில்.,
என்னை கடந்து சென்ற இருவர் பேசிக்கொண்டு சென்றது . என்னான்னா.,
            *"ஏ .  , என்னப்பா இது., இவ்வளவு ஆர்ப்பாட்டம்.?"
யாராச்சும் நடிகைய வெச்சு புக்கு ரிலீஸ் பண்றாங்களோ என்னமோ?
அட இல்லப்பா., இது காமிக்ஸ் ஸ்டாலு. இவிங்க எங்க நடிகைய கூப்பிடப் போறாங்க.!
(இந்த நேரத்தில் நண்பர் ஒருவர் ஊகூ என்று கூச்சலிடவே)
             *"ஏ , டான்ஸ் ஆடுவாங்க போல இருக்கேப்பா.?
யாரு ஆடுறது.?  அதோ., அவருதான் நடுவால நிக்குறாரு. அவர்தான் ஆடுவாருன்னு நினைக்கிறேன்.
யாரு? கையில் புக்கை வெச்சிகிட்டு போட்டோவுக்கு போஸ் குடுக்குறாரே அவரா.?? 
           ------இதற்குமேல் இந்த சம்பாஷனையில் காது கொடுக்க விரும்பாமல் நண்பர்களை கவனித்தேன்.
               *ஆளாளுக்கு பல கோணங்களில் போட்டோ எடுத்துத் தள்ளி கொண்டிருந்ததை பார்த்ததும்., எனக்குள் இருந்த கலையார்வம் மெல்ல எட்டிப் பார்த்தது. காமிரா மாமேதை கர்ணனின் பல படங்களை பார்த்து இருப்பதால்.,  ஓரளவுக்கு நாலெட்ஜ் இருப்பதாக நம்பி நாமும் கொஞ்சம் திறமையை காட்டுவோமே என்று
செல்போனை கையில் எடுத்துக்கொண்டு., ஆங்கிள் பார்த்தேன். 
             *ஸ்டாலும் நண்பர்களும் முழுதாக கவர் ஆகவில்லை. எனவே ஒவ்வொரு அடியாக பின்னோக்கி நகர்ந்து கொண்டே போய்.,  கால் இடறி ஏதோ ஒரு  ஸ்டாலில் பில்போட அமர்ந்திருந்த இருவரின் மடியில் உட்கார்ந்துவிட்டேன். கொடல் புடுங்கி கோவிந்தனிடம் சிக்கிய ஸ்டைல் பாண்டி நிலையில் பரிதாபமாக அவர்களை பார்த்தேன். அவர்களோ ,  பரவால்ல தம்பி., எந்திரிங்க.!  கவனமா இருக்கக்கூடாதா என்றனர். நான் ஸாரிங்க என்று சொல்லவும்., அதெல்லாம் வேணாம் தம்பி., அடுத்த தடவை மடியில உக்கார வந்திங்கன்னு வைங்க  என்றபடி ஒரு கோணி ஊசியை நிறுத்தி வைத்து காட்டினர்.
              *நான் மெதுவாக நமது கூட்டத்தில் கலந்து நின்று கொண்டு., அஹ்கா சூப்பரு  என்று வைகைப் புயலைப்போல் கைதட்டிக் கொண்டு மெதுவாக திரும்பி பார்த்தேன். அவர்கள் கோணி ஊசியை தூக்கி காண்பிக்கவும் , ஸ்டாலுக்கு உள்ளே போய் பாதுகாப்பாக நின்று கொண்டேன்.!
தொடர்ந்த ஒவ்வொரு நிமிடமும் நண்பர்களின் வருகை., தேன்கூட்டை அடையும் தேனீக்களைப்போல் கூடிக்கொண்டே போனது.
              *L MS ஐ கையில் வாங்கிய எல்லோர் முகத்திலும் LED வெளிச்சத்தை ஏராளமாய் பார்த்திட முடிந்தது. அங்கேயே சில நண்பர்கள் விவாதங்களையும் ஆரம்பித்து விட்டனர். அட்டையில் டைகருக்கு ஒரு கண்ணை காணோமே என்றும் இல்லைங்க ஒரிஜினல் போட்டோவே அப்படித்தான்., என்றும்  கலாட்டாக்கள் சூடுபிடித்தன.
               *கிங் ஷ்பெசல் விளம்பரத்தை., டைகர் கதை என ஒருவரும் புதிய அறிமுகம் என ஒருவரும் சொல்ல., அது ஸ்பைடர் கதை என்று ஸ்பைடர் ரசிகர்  சொல்லவும் சிரிப்பொலி எழுந்தது. (நல்லவேளையாக  மாடஸ்டி கதை என்று யாரும் சொல்லவில்லை.) அது டெக்ஸ் கதைங்க என்று ஒரு தீர்க்கதரிசி மிகச்சரியாக தீர்ப்பளித்து பஞ்சாயத்தை கலைத்தார்.
                *அடுத்து கையெழுத்து வாங்கும் படலம் ஆரம்பமானது. விரல் வலிக்க வலிக்க சலிக்காமல் எடிட்டரும் ஜூ.எடிட்டரும் கையெழுத்திட்டு கொண்டே இருந்தனர்.நானும் என் பங்கிற்கு எடிட்டரின் விரல்களுக்கு வேலை கொடுத்தேன். (கையெழுத்து வாங்குனேன்றதை கலைநயத்தோட சொல்றேனாக்கும்.) அப்படியே ஸ்டாலை ஒட்டியிருந்த நடைபாதையில் ஒதுங்கி அரட்டை கச்சேரியை ஆரம்பித்தோம்.
              *எடிட்டரிடம் நான் கேட்க நினைத்திருந்த ஒவ்வொன்றையும் ஒவ்வொருவராக கேட்டுக்கொண்டே சென்றனர். எனக்கும் ஏதாவது கேட்க வேண்டுமே என்கிற ஆதங்கம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனாலும் நான் வாய்திறக்கும் முன்னரே என் மனதில் இருந்த கேள்விகள்  மற்றவர்களால் கேட்கப்பட்டு விட்டது .
              *இந்த நேரத்தில் நண்பர் ஒருவர் எடிட்டர் அவர்களின் சிறுவயது பேட்டிகள் , போட்டோஸ் என ஒரு ஆல்பத்தையே தயாரித்து எடுத்து வந்து எடிட்டரிடம் காட்டினார். அதே நண்பரே சிங்கத்தின் சிறுவயதில் முழுத்தொகுப்பாக வெளியிடுங்கள் சார் என ஒரு கோரிக்கையும் வைத்தார்.
அடடே நாமும் இப்படி ஏதாவது வித்தியாசமாக கேட்கலாமே என்று தோன்றியது.
             *என்ன கேட்கலாம்., சி.சி.வயதில் கேட்டாச்சு. "வருகிறது " விளம்பரங்களை தொகுப்பாக கேட்கலாமா?  ச்சேச்சே அதுதான் வருட தொடக்கத்தில் கேட்லாக் கொடுத்துவிடுகிறார்களே.! அது வேண்டாம்.  ஆங்!  அதுதான் சரி., ஹாட்லைனை தொகுப்பாய் கேட்டு விடுவோம் என்று நினைத்து மெதுவாக., சார்!  அந்த ஹா...ஹாட் லைனை என்று ஆரம்பித்ததும்., எடிட்டர் ,என்னாது?  என்று  ஆர்வமாக திரும்பினார் . ஹா…ஆ…ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸ் வரும் வாய்ப்பிருக்கா சார் என்று உளறி வைத்தேன். இப்போதைக்கு வாய்ப்பில்லை தம்பு என்று உடனே பல்பு கொடுக்கப்பட்டேன்.
              *அந்த ஸ்பைடர் ரசிகர்., கலரில் ஸ்பைடர் கதைகளை கேட்க., எடிட்டருக்கே சிரிப்பு. (என்னைப் பற்றி கேட்கவா வேண்டும் . சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டேன். ஏற்கனவே  மாடஸ்டி கலரில் வேண்டுமென ப்ளாக்கில் கேட்டு இருந்தார்கள். ஆனாலும்  எளவரிசியைப் பற்றி யாரும் அங்கே  கேட்கவில்லை  )கலரில்
இரத்தப்படலம்., இரத்த கோட்டை என்று ஒரே கவிச்சையாக பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரிய்வில்லை.
             *லஞ்ச் டைம் நெருங்கி விட்டதென வயிறு வாய்ஸ் மெஸேஜ் கொடுக்கவும் மெல்ல கலைந்து ஹோட்டலில் தஞ்சமடைந்தோம்.
லஞ்ச் முடிந்து எடிட்டர் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்க சென்றுவிடவே ,
நானும் ,  நண்பர்கள் இருவரும் மற்ற ஸ்டால்களை நோட்டம் விட சென்றோம். (ஹிஹிஹி உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது. ஆமாமா., எல்லாத்தையும் நோட்டம் விடத்தான் சென்றோம்) .
               *கூட வந்த நண்பர்களில் ஒருவர்.,  ஏகப்பட்ட ஸ்டால்களில்  தேடி , எட்டு புள்ளி கோல புஸ்தகமும் .. , செட்டிநாட்டு சமையல் குறிப்பும் வாங்கினார். நெளி கோலமெல்லாம் போடமாட்டிங்களா பாசு என்று கேட்டேன்.  வொய்ஃப்புக்கு பாஸ் என்று சிரித்தார். அட., இதிலென்னங்க கூச்சம்., எனக்கே உபயோகப்படும்னு சொல்லி நானும் ஒரு செட் வாங்கிக் கொண்டேன்.
              *மீண்டும் நாங்கள்  நமது ஸ்டாலுக்கு திரும்பியபோது எடிட்டர் வந்ததிருந்தார். மேலும் கச்சேரி தொடர்ந்தது. ஹைலைட்டாக   கலர் டெக்ஸ் கலெக்ஷன் ஒன்று வெளியிட எடிட்டர் ஒப்புதல் அளித்தார். (போன மாதம் வெளியான லயன் 250) .
விளக்கு வைக்கும் நேரம் நெருங்கவும் வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்று சில நண்பர்கள் விடைபெறவும்., நானும் அனைவரிடமும் விடைபெற்று திரும்பினேன்.
             *போன வருசம் வீட்டம்மா கிட்ட  பர்மிசன் வாங்குறதுல அப்பரசெண்டியா இருந்ததால ஒருநாள் மட்டும்தான் கெடைச்சது. ஆனா இப்போ பர்மிசன் வாங்குற படிப்புல பட்டம் மட்டுமல்ல பி ஹெச் டி யே வாங்கிட்டமுல்ல. அதனால இந்த வருசம் ஈரோட்டுக்கு ரெண்டு நாள் புரோக்கிராமு பிக்ஸ் பண்ணியாச்சு. பட்டறைய போடுறோம் பட்டைய கெளப்புறோம் ஆம்மா.!!!!
             *நான் கிளம்பிய பிறகு., நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய செய்தியையும் போட்டோக்களையும் பார்த்தேன். அந்த நண்பரை மனதார வாழ்த்திவிட்டு போட்டோக்களை பார்த்தபோதுதான் அந்த விசயம்  கண்ணில் பட்டது.
              *அடடா.! அவசரப்பட்டு கிளம்பி , இப்படி ஒரு நல்ல விசயத்தை மிஸ் பண்ணிட்டோமேன்னு ரொம்பவும் வருத்தப்பட்டேன். இன்னும் கொஞ்சம் பொருத்திருந்தால் அந்த நல்ல தருணத்தை நாமும் அனுபவித்திருக்கலாமே என்று மனம் அடித்துக்கொண்டது.  போட்டோவில் பார்க்க பார்க்க ஏக்கம் அதிகரித்தது. எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் அந்த விசயம்.  இப்போது அந்த போட்டோக்களை பார்க்க நேர்ந்தாலும் கடைவாயில் உமிழ்நீர் சுரக்கும்!!  ஆமாம்., அந்த கேக் அவ்வளவு அழகாக இருந்தது.!! 
ஹிஹி!  ஹிஹி!
*நன்றிகள் பல.
*நித்தமும் நேசமுடனும் நெஞ்சம் நிறைந்த நட்புடனும்.,
-------------உங்கள் அன்பு.,-------------
KiD ஆர்டின் KannaN
&
Tex விஜயராகவன்.


 இது 'அவர்' வெளியிட 'இவர்' வாங்கிட்டதுங்க...


 இவிங்க தாங்க..அந்த கோவில்ல பொங்கல் வாங்க வந்த மாதிரி..வளையம் போட்டவிங்க...

அவரோட...குடும்பம்தாங்க இவிங்க...

இவிங்கதாங்க...நானு பேருவெச்ச..சே.ப.குழுகாரங்க...

அதே கோஸ்ட்டி ஆள்மாத்திநிக்கறாங்க....

இது நான் சொன்ன அந்த கே.வி.ஆனந்த் எடுத்ததுங்க....

இது நான் சொன்ன இந்த PC .ஸ்ரீராம் எடுத்ததுங்க....

இடது பக்கம் இருக்கறவர் 'இவருங்க'...வலது பக்கம் 'அவர்'..இது அவரு..இது இவரு...


பாத்தாலே வாயில 'உமிழ்நீர்' ஊருதுனது இந்த கேக்கைதான்....

இந்த போட்டோவைத்தான் மறக்கவே முடியாது...அந்த கோணிஊசி கடை பின்னாடி தெரியுது பாருங்க..அதுதான்...

அது நடக்காதுடியேய்...ன்னு சவுண்டு உட்டது நானு இல்லிங்க...

 நடைபாதை அடைச்ச...அந்த அரட்ட கச்சேரி இதுதாங்க...

இந்த பாப்பா போட்டோ எதுக்கு போட்டேன்..?!?!

Tuesday, July 28, 2015

சேலம் to ஈரோடு 2013

வணக்கம் நண்பர்களே...
         
            *ஈரோடு புத்தக திருவிழா 2015 கூப்பிடு தூரத்தில் வந்து விட்டது- என்ற தகவல் கிடைத்தவுடன் என் மனம் முந்தைய ஈரோடு திருவிழாக்களை சற்றே  அசைபோட்டது. ஈரோடு ஃபெண்டாஸ்டிக் நால்வர்கள் ஸ்டாலின் , புனிதசாத்தான், ஆடிட்டர் ராஜா , ஈரோடு விஜய் இவர்களை நான் சந்தித்தது 2012 டிசம்பரில் ஒரு நண்பர்கள் சந்திப்பில் தான் . அந்த முதல் சந்திப்பில் தான் தலீவர் பரணிதரனையும் முதல் முறை பார்த பேசி , ஒன்றாக சாப்பிட்டு, பழங்கதை பேசி மகிழ்ந்தோம்.
            * எங்கள் பேச்சு இரு மாதங்கள் முந்தைய ஈரோடு புத்தக விழா பற்றி திரும்பியது. 2012ஈரோடு புத்தக விழாவில் நமது காமிக்ஸ்கள் மற்ற இரு ஸ்டால்களில் வைத்து நல்ல முறையில் வரவேற்பை பெற்றது பற்றியும் ; அந்த விழாவில் தான் அதுவரை லயன் வலைத்தளத்தில் வெறும் பெயர்களாக மட்டுமே அறிந்து வந்த  நண்பர்கள் அனைவரும் நேரில் சந்தித்தது எனவும் - நண்பர் ஸ்டாலின் சொன்னார். மேலும் பல நண்பர்கள் உற்சாக ஆட்டத்தில் பங்கு பெற்றதையும் ஆர்வம் பொங்க விவரித்தார். ஆகா வடை போச்சே ! என்ற எண்ணம் எழுந்தது - காரணம் : ஆசிரியர் எப்போதும் குறிப்பிடுவது போல ஒரு மழைநாள் பகலில் கம்பேக் ஸ்பெசலில் இருந்து  அதுவரை வந்த காமிக்ஸ்களை சற்றே மீண்டும் புரட்டிய போது லயன் நியூ லுக் ஸ்பெசலில் இருந்த நண்பர் புனித சாத்தான் நெம்பரை தொடர்பு கொண்டதன் பலனே இந்த நண்பர்கள் சந்திப்பின் அழைப்பு. அந்த புரட்டலை இரு மாதம் முன்பே செய்திருந்தால் நானும் அந்த விழாவில் பங்கு பெற்று இருக்கலாமோ ???!!!.

          *2013ஈரோடு விழா நெருங்கி விட்டது ஆசிரியர் 2ம் ஞாயிறு வருகிறார் ,நீங்கள் முதல் ஞாயிறும் வர வேணும் என்ற நண்பர் ஸ்டாலினின் அன்பான அழைப்புக்கு  ஏற்ப, நான் என் மனைவி மற்றும் மகனுடன் சென்று இருந்தேன் . காலை 11.30க்கு ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள பிருந்தாவன் ஓட்டலில் காலை டிபன் இட்லியும் மசால் தோசையும் சாப்பிட்டு விட்டு ,நண்பர் ஸ்டாலினுக்கு போன் அடித்தேன் . பிருந்தாவன் ஓட்டல் வாசலில் உள்ளேன் என சொல்ல ,அவர் அப்படியே லெஃப்ட்ல பாருங்கள் 100மீட்டர் தூரத்தில் ஈரோடு புத்தக விழா நுழைவாயில் உங்களை வரவேற்கும் என்றார். 

            *சேலத்தில் புத்தக விழா என்றால் ஒரு கல்யாண மண்டபத்தில் நடக்கும், ஒரு 50கடைகள் அதிலும் அதிகம் கோலப்புத்தகமும் ஜோசிய புத்தகமும் குவிந்து கிடக்கும் . இங்கே மட்டும் என்ன பெருசா இருக்க போவுது ??? என்ற எண்ணத்துடன் உள்ளே நுழைந்தேன். ஒரு கணம் நான் தலை சுற்றி போனேன். அடேயப்பா .....200கடைகளுக்கு மேல் இரு பிரதான வரிசைகளில் ஒரு அரைக்கிலோமீட்டருக்கும் நேர்த்தியான ஒழுங்குடன் அணிவகுத்து என்னை முறைத்தன. இது உண்மையிலேயே புத்தக கடல் என்ற ஆச்சரியத்துடன் நமது ஸ்டாலை தட்டுத்தடுமாறி அடைந்தேன்.  

             *முதலில் என்னை வரவேற்றது திருப்பூர் ப்ளூபெர்ரி தான் ....அவருடன் நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.பிறகு சாத்தான் ஜி,ஆடிட்டர் ராஜா மற்றும் நிறைய நண்பர்கள் ஒவ்வொரு வராக சேரத்துடங்கினர். பிறகு விஜய் , ஒரு மணிநேரம் கழித்து சும்மா டிப்டாப்பாக ரெடியாகி தனது மகன் மனோஜ் உடன் ஸ்டாலின் ஒரு வழியாக வந்த சேர்ந்தார். 5ம் வகுப்பு படித்து வந்த என் பையனும், அதே ஸ்டாண்டர்ட் படித்து வந்த மனோஜும் உடனடியாக செட்டு சேர்ந்து கொண்டனர். இரு பொடியன்களையும் என் வீட்டுக்காரியையும் சுற்றி பார்க்க அனுப்பி விட்டு, நாங்கள் அரட்டை கச்சேரியை தொடங்கினோம் .

           *2012ல் இறுதி நொடியில் நமக்கு எப்படி ஸ்டால் கிடைக்காமல் போனது ,இந்த ஆண்டு அப்படி நடக்காமல், தனிஸ்டால் கிடைக்க நண்பர் ஸ்டாலின் செய்த பகீரத முயற்சிகள், வெள்ளிக்கிழமை தொடக்கம் முதலே கிடைத்து வந்த வரவேற்பு மற்றும் விற்பனை, நண்பர்களின் உற்சாக பங்கெடுப்பு மற்றும் ஒத்துழைப்பு என நேரம் ஓடியதே தெரியவில்லை. 3மணிக்கு சரி சாப்பிட போலாம் என பொடுசுகளை தேடி போனேன். பசங்கல எப்ப சார் வீட்டுக்கு கூட்டி போவீர்கள் என்றே ஒரு கடைக்காரர் கேட்டேவிட்டார். இருவரும் போட்ட ஆட்டம் அப்படி ,அவர்கள் புகுந்து புரட்டாத ஒரு கடையும் இல்லை என தெரிந்து கொண்டேன்.

             *மாலை 5மணி வரை அனைத்து ஸ்டால்களையும் சுற்றி வந்த என் வீட்டுக்காரி சொன்னது,"என்னங்க நம்ம- (கவனிக்க நம்ம) காமிக்ஸ் ஸ்டாலில் மட்டும் தாங்க கூட்டம் அதிகம் , எல்லாரும் வாங்கிட்டும் போறாங்க. மத்த கடைகளில் கூட்டம் போகுது ஆனால் எதாவது ஒரு கடையில் தான் விற்க்குது". ஈரோடு விழாவில் காமிக்ஸ்க்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கிறது எனபுரிந்த கணம் அதுவே. நண்பர் ஸ்டாலின் வீட்டிற்கும் ஒரு மினி விசிட் அடித்து விட்டு சேலம் வந்தோம். நான் கிளம்பி வந்த பிறகு நிறைய நண்பர்கள் வந்துள்ளனர் என ஸ்டாலின் அவர்களின் ப்ளாக் மூலம் அறிந்து கொண்டேன். அடுத்த ஞாயிறு ஆசிரியர் வரும் நாள் காலையில் சீக்கிரம் வந்து விடுங்கள் என்ற ஸ்டாலின் சாரின் அழைப்பு காதில் ஒலித்து கொண்டே இருந்தது. அந்த ஞாயிறும் வந்தது.இந்த சமயத்தில் இந்த லயனின் 2வது இன்னிங்ஸில் நண்பர் கர்ணன்  மற்றும் ஓரிருவர் மட்டுமே அறிமுகம் ஆகியிருந்த காலம் அது , அவருக்கு ஏதோ முக்கிய வேலை ஞாயிறு காலை இருந்ததால் மதியம் வந்து விடுகிறேன் என்றார் , நான் மட்டும் காலை 8க்கு கிளம்பினேன்.

              *ஆசிரியரையும் அனேக நண்பர்களையும் சந்திக்கும் ஆர்வத்தில் புத்தக காட்சி நுழைவாயில் செல்லும் முன்னே திடீரென "டெக்ஸ் விஜய்ய்ய்....என்ற குரல் என் கவனத்தை திருப்பியது. யார்னு பார்த்தால் தலீவர் பரணீதரன் , தன் குட்டி மகன் நரேந்திரன் உடன் மரத்தடியில் இருந்தவர் வரவேற்றார். ஆர்வ மிகுதியால் 10.15க்கே வந்து விட்டதாகவும் இன்னும் அரை மணி நேரம் உள்ளது நம்மை அனுமதிக்க என்றார். அப்புறம் என்ன ...11மணி வரை நம் புராணம்தான்..ஒரு வழியாக உள்ளே நுழைந்தால் சாத்தான் ஜி, மற்றும் ஆடிட்டர் ராஜா இருவரும் உடனடியாக வந்தனர் . ஆசிரியரை ஸ்டாலின் அழைத்து வருவதாகவும் இப்போது வந்து விடுவார்கள் என்றும் சொன்னார்கள். அடுத்து விஜய் , மளமள என சில பல நண்பர்கள் வந்தார்கள், என்னென்னவோ பெயரில் ஒன்றும் காதில் ஏறள ..அந்த ஒரு முகத்தை தேடியே வழியை பார்த்து கொண்டே இருந்தேன்.  

              *11.30க்கு அந்த முகத்தின் சொந்தக்காரர், ஆசிரியர் வந்து சேர்ந்தார். ஒவ்வொரு நண்பர்கள் உடன் கை குலுக்கி நலம் விசாரத்தவாரே வந்த ஆசிரியர் என் கையையும் பிடித்து விஜயராகவன் நல்லா இருக்கீங்களா என்றாரே பார்க்கலாம் ....   ஒரே ஒரு முறை 11மாதங்கள் முன்பு பெங்களூரு காமிக்கானில் ஒரு 15நிமிடங்கள் மட்டுமே சந்தித்து இருந்த என் பெயரை மறக்க வில்லையே என நான் ஆச்சர்ய பட்டு போனேன் ...பிறகு தான் உரைத்தது ஆசிரியர் ஒவ்வொரு நண்பரின் பெயரை சொல்லித்தான் அழைத்தார், அவரையே பார்த்து கொண்டு இருந்த ஆர்வத்தில் கவனிக்க மறந்தேன் என்பது . ஆசிரியரின் ஞாபகசக்தி கண்டு அனைத்து நண்பர்களும் சற்றே அரண்டு விட்டனர் . 

             *அதுநாள் வரை லயன் வலை தளத்தில் வெறும் பெயர்களாக மட்டுமே தெரிந்து வந்து நண்பர்களும் ,, பெயராக கூட தெரியாத நண்பர்களும் என பலரையும் நேரிலே பார்த்து பேச முடிந்தது . அனைவரும் ஆசிரியர் உடன் துவக்க நிமிட தயக்கங்கள் உதறி சகஜமாக பேச ஆரம்பித்தனர். கேள்விகள் , வினாக்கள் , வினவல்கள் , .......என சரமாறித் தாக்குதல் தொடுக்க அத்துனை பேருக்குமே சிரித்தும் , சில சமயம் மளுப்பியும், யோசித்தும் என ஆசிரியரும் சளைக்காமல் பதில் தொடுத்தார் .தலீவர் ஒரு லாங் சைஸ் நோட்ல இருந்து பல கோரிக்கைகளை போட்டுத்தாக்கினார். 

            *தனது ஒரு வயது குட்டி பாப்பா ,துணைவியார் உடன் நண்பர் பழனிவேல் , வீட்டம்மாவோடு நண்பர் சல்லூம் , பள்ளி செல்லும் செல்ல மகள் ,மனைவி சகிதம் ஈரோட்டுக்கு மிக அருகே இருக்கும் பள்ளிபாளையம் புனித சாத்தான் ஜி...மற்றும் அறிமுகம் இல்லாத சில நண்பர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கொண்டாட்டத்தில் தங்களையும் இணைத்து கொண்டனர் . எத்தனை தோட்டாக்கள் டெக்ஸ் சுடுவாறோ அத்துனை போட்டோக்கள் எடுக்கப்பட்டன. இரத்தபடலம் மற்றும் மின்னும் மரணம் முழு தொகுப்பு கேட்காத நண்பர்கள் யாரும் இல்லை அன்று .....

*திடும் என ஒரு நண்பர் சற்றே லார்கோவை விட உயரமாக ஆஜரனார். என்னை பார்த்த உடன் நீங்களா ? என ஒரு பார்வை பார்த்தார், நானும் தம்பி அதுநீதானா?என்ற எதிர் பார்வை வீசினேன். கிரிக்கட் ஆடுகளத்தில் பல வருடங்களாக கடுமையான மோதல்களில் ஈடுபட்டு வந்த இரு எதிர் அணி வீரர்கள் தம்பி யுவாவும் நானும் தான் அது . காமிக்ஸ்ன் ,அதுவும் டெக்ஸின் தீவிர ரசிகர்கள் இருவரும் என்பது அப்போது எங்கள் இருவருக்குமே தெரியாதது சிறிய இழப்பே. இப்போது எங்கள் சேலம் அணியின் தூணாகவும் ,உயிர் நண்பர்களில் ஒருவராகவும் உள்ளார்.        
                
 *ப்ளாக்கில் அந்த சமயத்தில் கடுமையான வாதங்களில் ஈடுபட்டு வந்த ஈரோடு விஜய்யும் பெங்களூரு கார்த்திக் சோமலிங்காவும் நேரிலே அந்த விழாவில் சந்தித்த போது..........(கீழே போட்டோ போடுகிறேன் அதில் உள்ள அவர்களின் உணர்ச்சிகளே சொல்லும் ,அதை விவரிக்க வார்த்தைகளும் வேண்டுமோ??). மதுரை நண்பர் கார்த்திகை பாண்டியன் ,நண்பர் கோகுல், மூத்த வாசக நண்பர் பாரதி நந்தீஸ்வரன், ஓவியர் &நண்பர் அஜய்சாமி,இன்னும் சில நண்பர்கள் காலை முதலே எல்லா கொண்டாட்டத்தின் போதும் உற்சாகத்தோடு ஆசிரியரோடும் நண்பர்களுடனும் பேசி மகிழ்ந்தனர்.                        

*அருகே இருந்த ஆக்ஸ்போர்டு ஓட்டல் ஏசி ஹாலில் மதிய உணவுக்கு ஈரோடு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆசிரியர் அருகே ஸ்டாலின் ,,எதிரே நான் ஒரே டேபிளில் சாப்பிட்டது மறக்க இயலா நிறைவான நீங்கா நினைவு . வெஜிடபிள் பிரியாணி மட்டுமே சாப்பிட்டார் ஆசிரியர். அருகருகே அனைத்து நண்பர்கள் கலகலப்பான உரையாடல்கள் உடன் சாப்பிட்டோம். சாப்பாட்டின் இடையே திருப்பூர் நண்பர் பிரபாகர் (எ) சிபிஜி இணைந்து கொண்டார் . ஐஸ்கிரீம் கடையில் லெமன் சோடா குடித்த போது ஆசிரியரிடம் வண்ணத்தில் டெக்ஸ் வர வாய்ப்புண்டாங் சார் என கேட்டுவைத்தேன்.9மாதங்களில் அந்த வேண்டுகோளை நிறைவேற்றி என்னை மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் திக்கு முக்காட வைத்து விட்டார் ஆசிரியர். வண்ண டெக்ஸ்க்கு துவக்க புள்ளி வைத்த அந்த லெமன் சோடாவை என்றுமே மறக்க இயலுமோ ????...........
    
 *4மணிக்கு நண்பர் கர்ணன் ,திருப்பூர் நண்பர் சிவசரவணகுமார் மற்றும் பல நண்பர்கள் சேர்ந்து கொண்டனர்.  ஸ்டீல் கிளா மட்டும் கடைசி வரை வரவேயில்லை. இப்போது நண்பர்கள் ,மின்னும் மரணம் முழுவண்ண தொகுப்புக்காக ஆசிரியரை ,டெக்ஸின் பிடிவாதத்துடன் நெருக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் மிடுக்குடன் மறுத்து வந்த அவரின் குரல் சற்றே தேய தொடங்கியதுடன் நண்பர்கள் "பீல்டிங்கை"சற்றே இன்னும் டைட் செய்தனர். வந்ததே அந்த ஆனந்த அறிவிப்பு ,"2015ஜனவரியில் மின்னும் மரணம் இறுதி பாகத்துடன் சேர்ந்து வரும் ".......நண்பர்களின் உற்சாக ஆரவாரமும் கைதட்டல்களும் காதை பிளந்தன. அக்கம் பக்கம் அனைத்து ஸ்டால் காரர்களின் பொறாமை பார்வையும் நம் ஸ்டால் மீது விழ ஆரம்பித்தது. மின்னும் மரணம் வெளிவர அஸ்திவாரம் போட்ட அந்த 15நண்பர்களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் காலரைத் தூக்கி விட்டு சற்றே பெருமிதம் கொள்கிறேன்.

            * அந்த உற்சாகத்துடன் ,மாலை சேர்ந்து கொண்ட நண்பர்களுன் கும்மாளம் என அந்த நாள் இனிய நாளாக என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் நண்பர்களே...........இத்தனை சம்பவங்களை நினைவு கூர்ந்து எழுதுவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல , ஏதும் சுவையான சம்பவங்களை நான் விட்டிருந்தால் நண்பர்கள் இங்கே குறிப்பிடவும். பெயர்கள் விட்டுப்போன நண்பர்களிடம் ஒரு சின்ன சாரியை தெரிவித்து கொள்கிறேன்.அடுத்த வாரம் 2014LMS நாளை நினைவு கூர்கிறேன். இதை எழுத சொல்லியும்  உற்சாகமும் படுத்திய சேந்தம்பட்டி நண்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி.
என்றும் மாறா நட்புடன் .......
*சேலம் Tex விஜயராகவன் &கிட் ஆர்டின் கண்ணன்.
*நண்பர்கள் யுவா,நான் ,சல்லூம் ,பிரபாகர் &கார்த்திக் சோமலிங்கா ஆசிரியருடன்...

*நண்பர் கார்த்திகை பாண்டியன் ,சாத்தான் ஜி.....

*கேள்வி கணைகளுடன் ஆசிரியரை தாக்கும் தலீவர் ......

*ஈரோடு விஜய் , ஸ்டாலின் ஜி, சேலம் கர்ணன் ,சாத்தான் ஜி, ஆசிரியர் ,திருப்பூர் சிவசரவணகுமார்,&நான்....

நண்பர் பழனிவேல்..தான் துணைவியாருடன்

புனிதசாத்தான்,ஓவியர் சாரதி & எடிட்டர்

எடிட்டருடன் யுவா கண்ணன்.

சில மைண்டுவாய்ஸ் கலாட்டாக்கள்


Wednesday, July 1, 2015

தி பெஸ்ட் ஆஃப் டெக்ஸ்

வணக்கம் நண்பர்களே......

           *இணைய உதவியுடன் வலைத்தளத்தில், வலை எழுத்தில், சொந்த தளத்தில் உங்களை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி நண்பர்களே..........கடந்த மாதம் டெக்ஸ் வில்லரின் டாப் 5மற்றும் நிறை குறைகள் ஆசிரியர் கேட்டு இருந்தார் , பல நண்பர்கள் பட்டாசு தோரணம் கட்டினார்கள் . நான் எப்போதும் கொஞ்சம் விரிவாகவே எழுதுவேன் என்பதால் தளத்தில் எழுதவில்லை ....(உதை வாங்கியது இன்னும் மறக்கவில்லை என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது )ஆனால் ஆசிரியருக்கு கடிதம் வாயிலாக அனுப்பி விட்டேன் . உங்களை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இது என்பதாலும், "தி லயன் 250" முதல் முறையாக 3முழு வண்ண டெக்ஸ் கதைகள் ஒரே இதழில் வரும் சமயம் என்பதாலும் இங்கே..............
                 
               டெக்ஸ் வில்லரின் டாப் 5
    1.பழி வாங்கும் புயல்
    2.கார்சனின் கடந்த காலம்
    3.பவள சிலை மர்மம்
    4.கழுகு வேட்டை
    5.டிராகன் நகரம்  

                               ------ இது என்னுடைய விருப்பம் மற்றும் ரசனையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்துள்ளேன் நண்பர்களே... காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா!!!(ப்ளாக்ல எழுதி இருந்தால் இந்த பழமொழிக்கும் மொத்தி இருப்பார்களோ ...?).இனி பெஸ்ட் ஆஃப் டெக்ஸ் வரிசையில் ஒவ்வொன்றாக பார்ப்போம்...........
1.பழி வாங்கும் புயல்:-            

                  *நான் முதலில் படித்தேன் என்பதற்காக இதை டாப்பாக செலக்ட்செய்யவில்லை....ஒரு பழங்குடி இன மக்களின் சொற்ப வீரர்களை வைத்து கொண்டு ஒரு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ராணுவ படைப்பிரிவுகளை வெல்ல முடியுமா???. அதுவும் உயிர்பலி ஒன்று கூட இல்லாமல் டெக்ஸ் தன்னுடைய புத்திசாதுர்யத்தால் அதை  செய்து காட்டி இருப்பார்.
             
                  *உல்லாச விளையாட்டின் உற்சாகத்தில் வெள்ளையர்களின் இரயில் உடன் போட்டி போடும் ஆறு  இளம் சிறுவர்களை பணபலம் மிக்க பிறை நிலா பண்ணை அதிபர்கள் இருவர் சுட்டு தள்ளியது கண்டு கொதித்து எழுகிறார்  டெக்ஸ்.  நீதி கேட்டு செல்லும் நவஜோஸ் தலைவரான தாமும் ஒரு வெள்ளையனே என்ற காரணத்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டெபியன்ஸ் கோட்டை கர்னல் ஸ்டீவர்ட்டிடம் முறையிடுகிறார்.கர்னலின் அலட்சியம் காரணமாக வெகுண்டெலும் டெக்ஸ் அவருடன் வாக்குவாதம் செய்ய , டெக்ஸை சிறையில் அடைத்து விடுகிறார் கர்னல். காவலர்கள் உதவியுடன் கர்னலை துப்பாக்கி முனையில் பிணைக்கைதியாக்கி தப்பி செல்லும் டெக்ஸ் போர் முரசு கொட்டிவிடுகிறார்.

             *இதற்கிடையில் ரயிலில் இருந்த கல்லாப் டெஸ்பாட்ச் நிருபர் ப்ளாயிட்  உண்மை சம்பவத்தை எழுத ,அதனால் ஆத்திரமடையும் பண்ணை அதிபர் சாம் ஹோப், அடியாட்கள் மூலம் ப்ளாயிடை தாக்கி பத்திரிக்கை ஆபிஸை அடித்து நொறுக்கி சர்வநாசத்தை செய்கிறான்.

           *கர்னலின் தலைமையில்  வரும் ராணுவத்தை நவஜோஸ்கள் தங்களின் எல்லையில் திரும்ப இயலா தொலைவு இழுத்து செல்கின்றனர். சில நவஜோஸ்களுன் வரும் டெக்ஸ் டெபியன்ஸ் கோட்டையை எரித்து விடுகிறார். கால்லப் நகர செரீப்பை சந்திக்கும் டெக்ஸ் ஹாப்பை அடித்து நொறுக்குகிறார்., ப்ளாயிட் பற்றி அறிந்து அவரை செவ்விந்தியர்களின் புரட்சி நிருபராக்குகிறார்.

                *இதற்கிடையில் ராணுவப்பிரிவுக்கு  தண்ணீரும் உணவும்,குதிரைகளுக்கு புல்லும் கிடைக்காமல் செய்யும் நவஜோஸ் ,தங்கள் குடியிருப்புகளை எரித்த வண்ணம் உள்வாங்கி செல்கின்றனர். ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க இயலா படைப்பிரிவு சரண்டைகிறது. கிட் வில்லரை கொல்ல முயலும் கர்னல் ஸ்டீவர்டை மொட்டை அடித்து சேணம் இல்லா குதிரையில் தப்பி செல்ல அனுமதிக்கிறார் டெக்ஸ்.

              *நவஜோஸ்களுடன் சென்று பிறை நிலா பண்ணையை தாக்கி தீயிலிட்டு கொளுத்தி விடுகின்றார் வில்லர்.குற்றுயிரும் கொலையுயிருமாக வின்கேட் கோட்டை சென்றடையும் ஸ்டீவர்டின் கூப்பாடின் காரணமாக ,ஒரு படைப்பிரிவு அனுப்பி வைக்கப்படுகிறது. இவர்களும் பழைய பாணியில் சரண்டைய வைக்கப்படுகிறார்கள்.

               *ராணுவ மேலிடம் டெக்ஸை பணிய வைக்க கார்சனை அனுப்புகிறது .சரண்டைய மறுக்கும் டெக்ஸ் தன் போர் திட்டத்தை தெளிவாக கார்சனுக்கு விளக்கி அவரை திருப்பி அனுப்புகிறார்.ப்ளாயிட் ,வாசிங்டன்ல உள்ள பிரஸ் நண்பர் மூலம் அரிசோனா யுத்தம்,கோட்டை அழிப்பு, படைப்பிரிவு சரணாகதி ,அரிசோனா கவர்னர் ப்ளிஸ்டரின் தவறான நடவடிக்கை -என அதிரடி செய்தி வெளியிட்டு பெரிய அளவில் தடாலடி செய்கிறார்.

           *விழித்து கொண்ட ராணுவ மேலிடம் நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறது. கால்லப் நகர செரீப் உதவியுடன் , கார்சன் வாயிலாக இதை அறியும் டெக்ஸ் படைப்பிரிவுகளை விடுவித்து செரீப்பை சென்றடைகிறார். தன் நடவடிக்கை பற்றி அறிய கால்லப் நகர் செல்லும் ப்ளாயிடை ஹோப் சுட்டு விடுகிறான் . இதை அறியம் டெக்ஸ் இதற்காகவும் ஹோப்பை தண்டிக்க, கார்சனுடன் இணைந்து ,உதவி செரீப் ஆகிறார்கள்.இவற்றை அறியும் அடியாட்கள் தப்பி செல்கிறார்கள்.

              *தண்டனை வழங்க உரிமையுள்ள நவஜோ தலைவர் பிக் எல்க் சகிதம் டெக்ஸ் குழு தப்பிச் செல்லும் ஹோப் மற்றும் அவன் நண்பனை துரத்தி செல்ல ,வஞ்சனையானவர்கள் அவர்கள் வழியே முடிவை தேடிக்கொள்கிறார்கள். நியூ கால்லப் டஸ்பாட்ச்சை உயிர் பெறச் செய்து ப்ளாயிட்டுக்கான நன்றிக்கடனை தீர்க்கிறார் டெக்ஸ்.

                *டெக்ஸின் உயிர் நண்பர் கார்சனோடே மல்லுக்கட்டும் நிலையிலும் தன் நவஜோஸ்களை கைவிடாதவர் தான் டெக்ஸ்...நட்பையே தன் மக்களுக்காக இழக்க துணியும் நாயகன் உயர்ந்து நிற்கும் காட்சி அது.
                
              *"முட்டையை உடைக்காமல் ஆம்லெட் பண்ண முடியுமா?",
                
                *"உண்மையை எடுத்துரைத்தவனுக்கு இதுதான் கதி என்கிற அளவுக்கு தரம் இறங்கிப் போய்விட்ட இந்த சமுதாயத்திற்காக நான் பேப்பரையும், மசியையும் வீணடிக்கத் தயாரில்லை",

              *"அவர், சாந்தமானவர்தான்- ஆனால் ரோசத்தில் யாருக்கும் சளைத்தவரில்லை",

              *"!பணி புரியப் போவது எனக்கல்ல - சத்தியத்திற்கு"
,
               *"கொல்லப்பட்ட நவஜோ இளைஞர்கள் பிக் எல்க்கின் பிரிவை சேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்குரிய தண்டனையை தீர்மானிக்கும் உரிமை அவருக்கே உரியது",

--- -போன்ற அமரத்துவம் வாய்ந்த டயலாக்குகள் மற்றும் அற்புதமான மொழி பெயர்ப்பும்  இந்த கதையை வெகு சுலபமாக முதல் இடத்தில் அமர்த்தின. 
--------சேலம் Tex விஜயராகவன்.

*எனது பெஸ்ட் ஆஃப் டெக்ஸ் வரிசையில்  2வது கதையை அருமை நண்பர் 'கிட்ஆர்ட்டின் கண்ணன்' அவரது நடையில் விமர்சிக்கிறார்...

2.கார்சனின் கடந்த காலம்:-                *கதைச்சுருக்கம் :தன்னை திர்த்துகட்ட நினைத்த நபரின் கதையை முடிக்கும் கார்சனுக்கு , அவன் பாக்கெட்டில் கிடைத்த துண்டு செய்தித்தாள் மூலம் பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. வில்லருக்கு விசயத்தை தெரிவிக்கச் சொல்லிவிட்டு., பழைய எதிரிகளை சந்திக்க கிளம்பிவிடுகிறார் கார்சன்.
                *கார்சனுடன் சேர்ந்து கொள்ள செல்லும் வழியில் மகனுக்கு கார்சனின் கடந்த காலத்தை விவரிக்கிறார் வில்லர்.கடந்த காலம் நிகழ்காலம் ரெண்டும் கலந்துகட்டி விறுவிறுவென செல்லும் வில்லரின் கதை சொல்லும் பாணி.!அந்நாளைய மான்டனாவின் பன்னாக் நகரம்.  சுற்றிலும் தங்கம் விளைந்த சொர்க்கபூமி.

                *தங்கத்தை சம்பாதிக்க இரண்டே வழிகள். நாள்முழுதும் பாடுபட்டு தோண்டி எடுப்பது ஒரு வழி, தோண்டியதை துப்பாக்கியை காட்டி ஆட்டயை போடுவது அடுத்த வழி. அப்படி ஆட்டை போடும் "அப்பாவி " கும்பலை வேரறுக்க ரேஞ்சர் கார்சன் சுயஅடையாளத்தை மறைத்து பன்னாக்கில் வசிக்கிறார்.

                *மெல்ல மெல்ல முடிச்சவிழ்க்கப்படும் மர்மத்தில் பேரதிர்ச்சியாய் அப்பாவிகளின் தலைவன் , பன்னாக்கின் ஷெரீஃப்பும் தனது நெருங்கிய நண்பனுமான ரே க்ளம்மன்ஸ் என்பது கார்சனுக்கு தெரியவருகிறது.ஆனால் க்ளம்மன்ஸோ கார்சனுக்கும் அப்பாவி கும்பலுக்கும் மொத்தமாய் அல்வா வழங்கிவிட்டு மொத்த தங்கத்தோடு தப்பிவிடுகிறான்.

                 *க்ளம்மன்ஸ்., மீண்டும் பன்னாக் , வந்திருப்பதை அறிந்த அப்பாவிகள் அவரை பழிதீர்க்க ஒன்று கூடீயிருக்கும் வேளையில் கார்சனும் பன்னாக் வந்தடைகிறார். வில்லர் அப்பாவி கும்பலுக்குள் ஐக்கியமாகிவிட., கார்சன் க்ளம்மன்ஸுடன் சேர்கிறார். அப்பாவிகள் பிணைக்கைதியாக க்ளம்மன்ஸ் மற்றும் லினாவின் மகளான டோனாவை பிடித்துக்கொண்டு க்ளம்மன்ஸை வஞ்சம் தீர்க்க காத்திருக்கும் வேளையில்.,

              *வில்லர் , கார்சன்., கிட்., க்ளம்மன்ஸ் குழு அப்பாவிகளை நிர்மூலமாக்கி டோனாவையும் தங்கத்தையும் மீட்டுவிடுகின்றனர்.காலங்காலமாக மாறத விதிமுறைப்படி வில்லன்கள் இறந்துவிட., ஹீரோ குழுவினர்  கும்பலாக சிரித்தடி போட்டோ எடுத்து கதையை சுபமாக முடித்து வைக்கின்றனர்.

                  *இக்கதை கொண்டாடப்படும் காரணங்களில் சில. :- நண்பனுக்காக எதையும் செய்வேன் , என்று அடிக்கடி கூறும் ரே க்ளம்மன்ஸ்., நண்பர்களை காப்பாற்ற உயிரையே இழக்கும் இடம் ஒன்று போதும். கெட்டவனுக்குள்ளும் நட்பு இருக்கும் , சூழலுக்கேற்றார் போல் நட்பின் முக்கிய்த்துவம் மாறுபடும். நண்பனைக் காப்பாற்ற உயிரையே விலையாக கொடுத்த க்ளம்மன்ஸ்தான்., நண்பனால் தனக்கு ஆபத்து வரலாம் என்றெண்ணி., அந்த நண்பனையே காவு கொடுக்க துணிகிறான். நட்பின் பல பரிமாணங்களை மிக அழகாக சொல்லிய காவியம்

                  *பாடகி லினா மேல்., கார்சன் கொண்டிருந்த ஒரு தலைக் காதல், ரொம்பவும் ரம்மியமான ஒன்று. லினாவின் காதல் ரே க்ளம்மன்ஸ் மீதே எனத் தெரிந்தாலும்., காதலை வெளிக்காட்டாமலேயே தொடரும் கார்சன் , கண்களின் ஓரம் நீர்கோர்க்க வைக்கிறார்.

               *நான் தனித்திருப்பது தெரிந்திருந்தால் என்னைத்தேடி வந்திருப்பீர்களா?  என்ற லினாவின் கேள்விக்கு., மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன் என்ற கார்சனின் பதிலில் எத்தனை சஞ்சலங்கள். உன் குழந்தையின் தந்தையை காப்பாற்றவே என்னை பின்னந்தலையில் தாக்கியிருக்கிறாய் என்று புரிகிறது லினா என கார்சன் சொல்லும்போது காதலியின் மனம் வேறொருவனுக்குச் சொந்தம் என்ற கார்சனின் ஏமாற்றம் கலந்த ஆதங்கம் தெளிவாக தெரிகிறது.
           
                 *க்ளம்மன்ஸை தொடரவிடாமல் லினாவால் பின் மண்டையில் தாக்கப்பட்டது., இன்னும் வலிக்கிறது என்று சொல்லும் இடத்தில் கார்சனின் காதலின் வலி நமக்கும் புரிகிறது.மீண்டும் லினாவை பாடச்சொல்லி கூட சேர்ந்து பாடுவது ஒன்றே லினா மேல் கார்சனுக்கிருக்கும் காதலை ஆணித்தரமாக நிரூபிக்கிறது. முக்கோண காதலையும் மிக அழகாக சொல்லிய காவியம் இது.

                * "தேசஞாணம் கல்வி ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய் காசுமுன் செல்லாதடி., ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்கு பின்னாலே  குதம்பாய் காசுக்கு பின்னாலே " என்ற உடுமலை நாராயண கவியின் வைரவரிகளுக்கு இக்கதை மிக அற்புதமான உதாரணம். உதாரண புருசன் - ரே க்ளம்மன்ஸ்.

                    *தங்கத்திற்காக., உயிர் நண்பனையே கொல்லச் சொல்கிறான். அந்த தங்கத்தை தேட்டை போடுவதில் அவனுக்கு உதவிய அத்தனை நண்பர்களுக்கும் நாமம் சாத்துகிறான். காதலியை முழுமாத கர்ப்பினியாக தவிக்கவிட்டு ஓடுகிறான். இறுதியாக புதைத்த தங்கத்தை  தோண்ட உதவியர்கள் இருவரையும் கூட இறுதிப் பயணம் அனுப்பிவிடுகிறான்.  பணத்தாசை பத்தாயிரம் செய்யும் என்று மிக அழகாக சொல்லிய காவியம்இது.

                 *பொன்னாசையால் நட்பு காதல் விசுவாசம் அனைத்துக்கும் துரோகமிழைக்கும் க்ளம்மன்ஸ்., புத்திர பாசத்திற்காக அந்த தங்கத்தையே தாரைவார்க்க தயாராகிறான். பெற்ற பிள்ளைகளுக்கு சொத்தை கொடுத்துவிட்டு தெருவில் நிற்க்கும் எத்தனையோ பெற்றோரை நாம் பார்த்திருப்போம் . ஆகவே பிள்ளை பாசத்திற்க்கு முன் பொன் பெரிதல்ல என்பதையும் மிக அழகாக சொன்ன காவியம் இது.

               *பூன்., வாகோ டோலன்., ஒற்றைக்கண்ணன்., பில்லி க்ரைம்ஸ்., ரோஜர் லாவல்., செஸ்டர்., ஜானி லேம்., அக்கவுண்டன்ட் லேரி , டோப்ஸ் சகோதரர்கள் ஸ்கின்னர் மற்றும் பல கொடூர வில்லன்கள் அப்பாவிகள் என்ற பெயரில். சங்கேத பாஷைகள்., சிவப்பு ஸ்கார்ஃப்., கைகுலுக்கும் விதம்., ஈவிரக்கமற்ற கல்மனசு என  காலத்திற்க்கும் மறக்க முடியாத பாத்திரப் படைப்புகள் இவர்கள். கூட இருந்து குழிறித்த க்ளம்மன்ஸின் கையாட்களின் கொலை முய்ற்ச்சியில் இருந்து கார்சன் தப்பும் சம்பவம் ..

                *வில்லரும் கிட்டும்., வழியில் சந்திக்கும் இரு அப்பாவிகளிடம் மோதும் கட்டம்.,டோனாவை கிட்வில்லர் காப்பாற்றும் சம்பவம்., கையில் துப்பாக்கி இல்லாமல் அப்பாவிகளின் மத்தியில் வில்லர் கலக்கும் கட்டம்.,பாழடைந்த நகரத்தில் நடக்கும் பயங்கர க்ளைமாக்ஸ் மோதல் என பரபரப்பான ஆக்சன்களையும் பஞ்சமில்லாமல் மிக அழகாக சொல்லிய காவியம் இது

                 *காலத்தால் அழியாத காவியமாம் கார்சனின் கடந்த காலத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட்ட சங்கதிகள் சில. சொல்லப்பட வேண்டிய சமாச்சாரங்கள் பல. டெக்ஸ் வில்லரின் ஆகச்சிறந்த கதைவரிசையில் என்மனதில் என்றென்றும் நீங்கா முதலிடம் பிடித்திருக்கப்போவது இந்த காவியம்தான்.  நன்றிகள் பல.!!!
---------கிட் ஆர்டின் கண்ணன்.
   *****-------------*****------------*****----------*****
***என்னுடைய சொந்த டைரிக்குறிப்பில் இருந்து இதுவரை லயன் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட டெக்ஸ் வில்லரின் கதைகள் பட்டியல் இதோ உங்களின் பார்வைக்கு நண்பர்களே***

*வலையுலக தமிழ் காமிக்ஸ் மூத்த பதிவர்களுக்கு முதல் வணக்கம். தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தும் சேந்தம்பட்டி காமிக்ஸ் குழு நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் .
*என்னுடைய எழுத்துக்களுக்கு முதன் முதலில் வலையேற்றம் அளித்த நண்பர்  ஈரோடு ஸ்டாலினுக்கும்,, வலையுலகில் எனக்கான கூடு அமைத்து தந்த அருமை நண்பர் மாயாவி சிவா அவர்களுக்கும் அந்த "நன்றி" என்ற மூன்றெழுத்தை காணிக்கை ஆக்குகிறேன். 
**********என்றும் மாறா நட்புடன்*********
     சேலம் Tex விஜயராகவன்.